வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அந்நிய மண்ணில் தமிழிசை


இசையாருக்குத்தான் பிடிக்காது? அது ஒலிக்கற்றை தானே! நம் ஒவ்வொரு அசைவிலும் இசையின் வடிவங்களைப் பார்க்கலாம், அதிலும், தமிழிசை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், கர்நாடக இசைக்கு நான் எதிரி அல்ல. அது, எனக்கு விருப்பமில்லாமல் போவதற்குக் காரணமே 
தரி னி னினி னானா னானா என்று

இழுத்துக் கொண்டே போய் எப்ப முடிப்பார்கள் என்று தெரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை, எனக்கு வெறுப்பைத் தந்தாலும், இசையை முறையாகக் கற்றவர்களுக்குத்தான் இதனுடையே பொருளும், பின்னணியும் புரியும் என்று நினைக்கிறேன்.அக்னிநட்சத்திரம் என்ற திரைப்படத்தில்,

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்  இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
 
என்ற பாடலை அந்நாளில் முணு முணுக்காதவர் அந்நாளில் யாரும் இருந்திருக்க முடியாது.  நம் இராகதேவனின் மெல்லிய இசை, இப்பாடலுக்கு நர்த்தனமிடும். ஆனால், கவிஞர் வாலிக்கு நின்னுக்கோரிஎன்ற வார்த்தைக்குப் பதிலாக வேறு நல்ல தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை போலும்! “நின்னுக்கோரி” வார்த்தைக்குப் பொருள் தேடியதுயெல்லாம் ஒரு காலம்!.   இப்படி எத்தனையோ உதாரணங்கள்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், பெங்களூரில் தேனிசை செல்லப்பாவின் குரலில் காசி ஆனந்தன் பாடலான “தமிழா! நீ பேசுவது தமிழா” என்ற பாடலைக் கேட்டவுடன், எனக்கு அவர் காலைக் கட்டிக் கொட்டிக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. அதைக் கேட்டால் பிணங்களுக்கும் உணர்ச்சி வரும் என நினைக்கிறேன்.  ஏனெனில், அதில் பாடப்படுகிற மொழி, நம் உணர்ச்சியைத் தட்டிவிடும் ஓர் வினையூக்கி! நீங்களும் தான் கேட்டுப் பாருங்களேன்.



அதே போல, “சாந்தி நிலவ வேண்டும்என்ற பாடலை சேதுமாதவ ராவ் எழுதியது என நினைக்கிறேன்.  ஆனால், இதை பட்டம்மாள் பாடிய போது பெரும் வெற்றி பெற்றது. இதற்குக் காரணமே, அப் பாட்டில் உள்ள எளிமையும், கவர்ச்சியான மெட்டுமே காரணங்களாக இருக்கக் கூடும்

சிந்து பைரவி என்ற திரைப்படத்தில் சிவகுமாருக்கும், சுகாசினிக்கும் நாட்டுப்புறப் பாடல் பற்றி ஒரு உரையாடல் வரும். இதோ அந்த காணொளி:





இதில் வரும் சுகாசியினின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடும். நம் வீட்டில் பாட்டி பாடிய தாலாட்டும் (எங்க அம்மாவிற்கு மட்டும் தான் தாலாட்டுத் தெரியாது என நினைக்கிறேன்!!! ..), கிராமங்களில் காணப்படும் ஒப்பாரிப் பாட்டும் நம் மனதை நெருடக் காரணம் அதில் அடங்கிய பொருள் தானே மேலும்,

அமெரிக்க வந்த பிறகு, யாராவது தமிழ்ப் பாட்டு பாட மாட்டார்களா என்று ஏங்கிய போது தான், வாசிங்டன் தமிழ்ச் சங்கம் 2010 ஆம் ஆண்டு தமிழிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள் எனக் கேள்வியிற்று அதைக் கண்டேன். நல்ல முயற்சி! ஒவ்வொரு ஆண்டும் இந் நிகழ்ச்சி மெருகு கூடுவது கண்கூடு.

இதன் தொடர்ச்சியாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை வெள்ளி விழாவிலும் தமிழிசைக்கென்று ஓர் நிகழ்ச்சியைத் தனியாக நடத்தினர். தமிழிசைக்கென்று ஓர் நிகழ்ச்சியைத் தனியாக நடத்துவது பேரவையில் இதுவே முதன் முறையாம்!. 

சற்றொப்ப,பத்தாயிரத்துக்கும் மேலான இசைக் கச்சேரிகளை நடத்திய பெருமைக்கு உரியவர். இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகரின் மாணவரும், தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவரின் மகனுமான கலைமாமணி T.K.S.கலைவாணன் அவர்கள் தலைமை ஏற்றார்கள்.பேரவையின் நிகழ்ச்சிகளில் அனைவரையும் கட்டிப் போட்ட நிகழ்ச்சிகளின் இதுவும் ஒன்று என்று கூறலாம். இடம் பெற்ற அரங்கில் நிற்கக் கூடா இடம் இல்லாத அளவிற்குக் கூட்டம்.  ஏறக்குறைய 30 சிறுவ சிறுமிகள் கலந்து கொண்டும் அனைவரையும் “இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த”  அனைவரையும் அழைத்தனர் என்று கூறினால் அது மிகையாகாது. அவர்கள் தேர்ந்தெடுத்த பாடல்களும் சரி, சொற்களை உச்சரித்த முறையும் சரி, இவர்கள் இந் நாட்டில் பிறந்து வளர்ந்து வருபவர்களா என எண்ணத் தோன்றுகிறது. சிலப்பதிகாரம், பாரதியார் பாட்டு, காசி ஆனந்தன் பாட்டு, காவடிச்சிந்து, பள்ளு வகைப் பாடல்கள் என்றெல்லாம் அசத்தினார்கள்.  இதெல்லாம் எப்படி இவர்களுக்குத் தெரியும் என ஒரு பெற்றோரிடம் கேட்டேன்.  நாங்கள் பாட்டு வகுப்புக்கு அனுப்பும்போதே, தமிழ்ப் பாடல்களைக் கற்றுக் கொடுங்கள் என நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டுவோம் என்றனர். என்ன இருந்தாலும், நம்மை நாமே மறக்கலாமா எனத் திருப்பி என்னைக் கேட்டனர்.  என்னே அவர்களது தமிழ்ப்பற்று!

பேசிக் கொண்டிருந்தால் எப்படி? காணொளியைப் பாருங்கள்:






தலைமையேற்ற கலைமாமணி கலைவாணன், இச் சிறுவ சிறுமிகளின் இராக ஆலாபனைகளைக் கண்டு தாம் புளகாங்கிதம் அடைந்ததாகவும், தமிழ் நாட்டில் வளரும் குழந்தைகள் கூட இவ்வளவு சரியாக ஆலாபனைச் செய்ய மிகவும் நாளாகும் எனக் கூறக் கேட்க மகிழ்ச்சியாயிருந்தது.

அடுத்து பாராட்ட வந்த தோழர்.நல்லக் கண்ணு ஐயா, இச் சிறுவ சிறுமிகளின் உச்சரிப்பைக் கண்டு, உண்மையிலேயே இவர்கள் இங்கு தான் படிக்கிறார்களா? அல்லது தமிழகத்திலிருந்து வந்தவர்களா எனத் தான் ஐயமுறுவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த நாள், திரு.கலைவாணனின் தனி நிகழ்ச்சியும் நடை பெற்றது.  தம் “கணீர்” குரலால் 45 நிமிடம் அவையோரைக் கட்டிப் போட்டார்.  பாரதி, தாசன், காசி ஆனந்தன், ஆகியோரின் பாடல்களைப் பாடும் போது அவையோர் தம்மையும் மறந்து அதிலேயே மூழ்கிவிட்டனர்.  அது தானே, தமிழிசைக்கு வெற்றி! இறுதியில், முடிக்கும் போது, அவையோர், இன்னும் “ஒரே ஒரு பாட்டு” எனக் கேட்ட போது, “ஒரு நாள் போதுமா” எனப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

ஏதோ அறியாத பாட்டிற்கும், புரியாத இராகத்திற்கும் தலையாட்டுவை விட இசையை நம் மொழியோடு கலக்கும் போது, தென்றலைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நுழைந்தது போல் ஓர் உணர்வு.

இவற்றையெல்லாம் உற்றுப் பார்க்கும் போது, தமிழகத்தில் தமிழில் பேசக் கூடக் கூச்சப்படுவதும், அந்நிய மொழியில் பேசினால்தான் பெருமை என்பதும் சிலரது நிலைபாடாகக் கண்டு வருத்தம்தான் அடைய வேண்டியுள்ளது. பொருள் தேடி அந்நிய மண்ணிய வந்தவர்கள், தம் மொழியையும், பண்பாட்டையும் மறவாதிருப்பதும் பெருமைக்குரியதன்றோ?

2 கருத்துகள்: