வியாழன், 2 ஆகஸ்ட், 2012

உன்னதமான இயக்குனர் பாலுமகேந்திரா….


உன்னதமான இயக்குனர் பாலுமகேந்திரா….

தமிழ்த் திரை உலகில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்து இருக்கிறார்கள், எதிர் காலத்தில் நிறைய இயக்குனர்கள் வருவார்கள்…ஆனால் நம் திரை உலகில் பாலுமகேந்திராவிற்கு என்று ஒரு உன்னதமான இடம் இருக்கத்தான் செய்கிறது.
பாலுமகேந்திரா என்றவுடன் “வீடு”, “சந்தியராகம்”, “மூன்றாம் பிறை” அருமையான காவியங்கள் எப்படி நினைவிற்கு வராமல் போகும். இந்த மூன்று திரைப் படங்களும் எண்ணற்ற விருதுகளை பெற்றப் படம். வீடும், மூன்றாம் பிறையும் தேசிய விருதுகளை பெற்றவை.

பாலுமகேந்திரா, ஈழத்தில் பிறந்தவர். தமிழில் நிறைய வாசிப்பவர். தமிழ் இலக்கியத்தின் மீது தீராத தாகம் கொண்டவர். நிறைய சிறுகதைகளை படித்து, உள்வாங்கி, அதனையே சிந்தித்து அதனை திரைப்பட வடிவில் கொடுக்க வேண்டும் என்ற தீராத காதலுக்கு சொந்தகாரர் பாலுமகேந்திரா அவர்கள்.

சன் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களுக்கு முன்பு தமிழில் சிறப்பான சிறுகதைகளை எடுத்து, வாரம் வாரம் “கதை நேரம்” என்று தொடராக வந்தவை.  சிறுகதைகளை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நீங்காத இடம் பெற்றவை இந்த தொடர்கள் என்றால் அது மிகையாகது!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தக கண்காட்சியில் இந்த குறும் படங்களில் சிலவற்றை டிவிடி யாக இருந்த பொழுது, அதனை பார்த்தவுடன் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வாங்கி வந்தேன். அதில் இன்னோரு பாகமும் வந்துவிட்டது, அதனையும் வாங்கி வந்தேன். அவற்றுள் மொத்தம் 10 கதைகள் இருக்கின்றன. அனைத்தும் தங்கம், வைரம், மாணிக்கம் என்றால் உண்மையே உண்மை. திரைப் படத்தை, தமிழில் ஒரு மாற்று சினிமா நேசிப்பவர்கள் அனைவரும் வைத்து இருக்க வேண்டிய டிவிடி இது.  
அப்படிப்பட்ட புதையலில் உங்களுக்கு ஒரு வைரத்தை உங்கள் பார்வைக்கு விருந்தளிக்க விரும்புகிறேன். அந்த கதையின் பெயர், “தப்புகணக்கு”, மூலக் கதை – மாலன், திரைக்கதை மற்றும் இயக்கம் பாலுமகேந்திரா.

இந்த கதையின் நாயகி 7 வயது சிறுமி, சக்தி என்ற பெயர் கொண்டவள். இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. இவருடைய கணக்கு பாடத்தில் கேட்கப் பட்ட ஒரு சிறு கேள்வியே இந்த கதையின் மையக்கரு.

சக்தியும், தாத்தாவும் நல்ல நண்பர்கள். தாத்தாவின் பெயர் வைத்தியலிங்கம். சென்னை பல்கலைகழகத்தில் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். பேத்தியின் கேள்விகளுக்கும், புதிய சிந்தனையை தொடர்ந்து ஆதரித்து வருபவர்.

சக்தி கணக்கு பாடத்தில் 100/100 வாங்கினால் பரிசு அளிப்பேன் என்று தாத்தா வாக்கு கொடுத்து இருப்பார். கணக்கு தேர்வு நடக்கும் அன்று, பரிசு வாங்கி வைத்து விட்டு, பேத்தியின் வருகைக்காக மொட்டை மாடியில் காத்துக் கொண்டே இருப்பார்.

பேத்தி சக்தி பள்ளி முடிந்து மாலை வரும் பொழுது கதவை திறக்கும் பொழுது, தாத்தா, சக்தியிடம் கணக்கு நோட்டை எடுத்துக் கொண்டு மேலே வாம்மா என்பார்.

சக்தி மொட்டை மாடிக்கு வந்து, தாத்தாவிடம் நோட்டை கொடுத்து விட்டு, உம்மென்று நிற்பாள், தாத்தா ஏன் என்னாவாயிற்று என்பார்? அந்த நோட்டை எடுத்து பார்த்தவுடன், 80/100 மதிப்பெண்கள் எடுத்தும், ஒரு கேள்வியை தவறு என்று ஆசிரியர் திருத்தி இருப்பார், அந்த கேள்வி மற்றும் பதில் 7 X 2 = 14 என்று இருக்கும். தாத்தா சரியாகதான் உள்ளதே என்பார். அதற்கு குழந்தை சக்தியும் ஆமாம் என்று சொல்லி விட்டு, மீண்டும் உம்மென்று இருக்கும். தாத்தா நீ சரியாகதான் எழுதியுள்ளாய்! உன் மீது தவறு இல்லை, என்று சொல்லி விட்டு சக்திக்கு வாங்கி வைத்துள்ள பொம்மையை கொடுத்தவுடன் மகிழ்ச்சியாக வாங்கி கொள்ளுவாள் பேத்தி சக்தி.  

அடுத்த காட்சியில் தாத்தா, பள்ளி சென்று சக்தியின் ஆசிரியை பார்த்து தன்னை சக்தியின் தாத்தா என்று அறிமுக படித்துக் கொண்டு, அந்த கணக்கில் என்ன தவறு என்பார் மிக மிக பணிவோடு, அந்த ஆசிரியர் அது தப்புதான் சார் என்பார்! எப்படி? என்று மீண்டும் தாத்தா கேட்க, அதற்கு ஆசிரியர், ஒரு வாரத்தில் ஏழுநாள், இரண்டு வாரத்தில் எத்தனை நாள் என்று கேட்டதற்கு உங்களது பேத்தி 2 X 7 = 14 என்று எழுதாமல் 7 X 2 = 14 என்று எழுதியது தவறு என்று சொல்வார்! ”நாங்க வகுப்பில் என்ன சொல்லி கொடுக்கிறமோ அப்படியே எழுதவேண்டும், மாற்றி எழுதினால் மதிப்பெண்கள் தரமுடியாது என்பார்!” தாத்தா நான் உங்களது தலைமை ஆசிரியரை பார்க்க வேண்டி வரும் என்பார், ஆசிரியரும் தராளமாக பார்த்து கொள்ளுங்கள் என்பார்!

தலைமை ஆசிரியரும் முழுக்க கேட்டு கொண்டு, அந்த ஆசிரியரை அறைக்கு வரவழைத்து எல்லாவற்றையும் கேட்டு அறிந்துக் கொண்டு, தாத்தாவிடம் உங்களது பேத்தியின் விடை சரியாக இருக்கலாம், ஆனால் வழிமுறை தவறு என்பார், அதற்கு மேல் அவர்களிடம் பேசி பயன் இல்லை என்று தாத்தா வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்து விடுவார்!

அடுத்த காட்சியில் மாவட்ட கல்வி அதிகாரியை பார்த்து இந்த பிரச்சினையை சொல்வார், அந்த அதிகாரி மிக மிக அவசரமாக வெளியே செல்ல இருப்பதால் இந்த பிரச்சினையை மிக வேகமாக கேட்டு அறிந்து கொள்வார்! அவரும் தன் பங்குக்கு “உங்களது பேத்தியின் விடை சரியாக இருக்கலாம்” என்றும், ”முடிவுகள் சரி இருந்தா மட்டும் போதாது, அதன் வழிமுறைகளும் சரியாக இருக்கவேண்டும் என காந்தி சொல்லி இருக்கிறார்” என்று சொல்லி விட்டு, இந்த பிரச்சினை என்னுடைய எல்லைக்குள் இல்லை, மற்றோரு கல்வி அதிகாரியை பார்க்கவேண்டும் என்று சொல்லு அவரும் கழண்டு கொள்வார்!

அடுத்த காட்சியில் கல்வி மந்திரியை பார்த்து முறை இடுவதற்கு முன்பு, தனது நண்பனிடம் பேசிக் கொண்டு இருப்பார் தாத்தா. நண்பர் உனது மகளிடம் ஒரு முறைப் பேசிவிட்டு, கல்வி மந்திரியை பார் என்பார்…இப்படி சுயமாக சிந்திக்கிற பெண்களுக்கு ஒரு நல்ல முடிவே கிடையாது என்று நண்பனிடம் வருத்தப் பட்டு பேசி விட்டு தன் இல்லம் செல்வார்.

கதையின் இறுதி காட்சி, மொட்டை மாடி, தாத்தா, அவரது மகள், மாப்பிள்ளை எல்லோரும் அமர்ந்து இருப்பார்கள். தாத்தாவிடம், சக்தியின் அம்மா, ”அப்பா நீங்கள் எங்களிடம் பேசி விட்டு, பள்ளி கூடம் சென்று பேசி இருக்கலாம் என்று பேசி கொண்டு இருக்கும் பொழுது, சக்தியின் அப்பா (மாப்பிள்ளை), மாமா, பள்ளி கூடத்தில் சொல்லி கொடுப்பதைதான் பெண் கற்று கொள்ள வேண்டும், Military training போல என்பார், அதற்கு தாத்தா, அப்ப பள்ளிகூடமும், Military training ஒன்று தானே என்பார் தாத்தா!

சக்தியே கேளு என்ன நடந்தது என்று என்பார் தாத்தா, சக்தி மொட்டை மாடிக்கு வந்தவுடன், அப்பா ஒரு வாரத்திற்கு எத்தனை நாள் என்றும் இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள் என்றும் கேட்க, அதற்கு சக்தி 7 X 2 = 14 என்பாள், ஏன் என்று அப்பா கேட்க, அதற்கு சக்தி ஒரு வாரத்தில் ஒரு திங்கள், ஒரு செவ்வாய், ஒரு புதன், ஒரு வியாழன், ஒரு வெள்ளி, ஒரு சனி மற்றும் ஒரு ஞாயிறு உள்ளதால் இரண்டு வாரத்தில் இரண்டு திங்கள், இரண்டு செவ்வாய், இரண்டு புதன்……ஆக மொத்தம் 14 என்பாள்!
தாத்தா, சபாஷ், this is called creativity! Different approach என்பார்! அதற்கு சக்தியின் அப்பா, மாமா, இவ பொட்ட புள்ள! சுயமா சிந்திச்சா இவளுக்கும் கஷ்டம், நமக்கும் கஷ்டம், அப்புறம் இதுவே பழக்கமாக மாறிவிடும், போக போக இவ நடைமுறையில் உள்ள சம்பிராதயங்கள், நம்பிக்கைகள் இப்படி பலவற்றை பற்றி கேள்வி கேட்பா! பொம்பள புள்ள ஊரோடு ஒத்து போகணும்! இப்படி சுயமா சிந்திச்சா ரொம்ப கஷ்ட படுவா! என்று சொல்லி விட்டு அந்த மொட்டை மாடியே விட்டு கீழே சென்று விடுவார் அப்பா, கூடவே அவரது மனைவியும் சென்று விடுவார்!
காமிரா அப்படியே சக்தியின் முகத்தை close up ல் காட்டி விட்டு அத்தோடு கதை முடிந்து விடும்!!!
கதையின் முடிவினை பார்வையாளர்கள் சிந்தனைக்கு விட்டு விடுவார் இயக்குனர். ஒரு பெண் குழந்தை சுயமாக சிந்தித்தால் சமுதாயத்தில் என்ன மாதிரி பிரச்சினைகள் வரும் என்பதை நம் ஊகத்திற்கே விட்டு விடுகிறார் இயக்குனர்!

இந்த கதையை பார்த்து இரண்டு ஆண்டுகள் இருக்கும், ஆனால் இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது! சமுதாயத்தின் மற்றோரு பக்கத்தை, பள்ளிகள் எந்தவித Creativity இல்லாமல் இருப்பதை, ஆசிரிய சமுதாயம் புதிய சிந்தனையை, மாற்றத்தை உள்வாங்க தயாராக இல்லை என்பதை, சக்தியின் பெற்றோரே அந்த குழந்தையின் மாற்று சிந்தனையை போற்றி வளர்க்க தயாராக இல்லை என்பதை 6 அல்லது 7 காட்சிகளில் மிக அற்புதமாக உங்கள் கண் முன்னே படைத்து இருப்பார் இயக்குனர் பாலுமகேந்திரா!

அருமையான கதைகளை, தான் வாழும் சமுதாயத்தில் இருந்தும், நன் முன்னோர்கள் எழுதி வைத்த இலக்கியத்தில் நிறைய இருக்கிறது என்றும் ஆழமாக நம்பும் ஒரு உன்னத படைப்பாளி பாலுமகேந்திரா!

அவரிடம் பல கோடிகள் இல்லை! மாட மாளிகைகள் இல்லை! ஆடம்பர கார்கள் இல்லை! இன்றும் திரைப்பட விழாக்களுக்கு ஆட்டோவில் வருகிறார்! ஆனால் அவரது படைப்புகள் தமிழ் உள்ளவரை, இந்த வானம் உள்ளவரை, இந்த காற்று உள்ளவரை, இந்த கடல் உள்ளவரை இருந்து கொண்டே இருக்கும்!!!

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் (குறள் 975, பெருமை)

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச் 
செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.


4 கருத்துகள்:

 1. உன்னதமான இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் உன்னத தொகுப்பு …
  நல்ல அலசல்.... வாழ்த்துக்கள்...

  தமிழ் மணம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை !
  நன்றி…

  பதிலளிநீக்கு
 2. வாழ்வின் அழகியலை அநுபவித்து அளிக்கும் இயக்குனரைப்பற்றிய அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 3. thangaludaiya karuththukku naanum udanpadugiren kaaranam naanum ovvoru budhandrum sun tholaikkaatchiyil varum kadhai neram thodarai virumbipaarpavanul naanum oruvan ennamo appadipatta iyakkunargalukku anega makkal virubuvadhaillai padaippaali thiru balu mahendravukku ennudaiya vanakkangal nandri

  பதிலளிநீக்கு