செவ்வாய், 31 ஜூலை, 2012

யாதுமாகி நின்றவள்…


நாம் கடந்த வந்த பாதையில் எத்தனையோ விதமான மனிதர்களை பார்த்து இருப்போம், பழகி இருப்போம்ஆனால் வெகு சிலரே உங்கள் மனதை விட்டு நீங்காமல் பச்சை பசேல் என்று என்றும் உங்கள் நினைவில் இருந்து கொண்டே இருப்பார்கள், அப்படி பட்ட ஒரு நபரை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை….

அந்த நபர் வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பத் தலைவி, அம்மா, எல்லா வற்றிக்கும் மேலாக ஒரு சமூக சேவகி. இவர் கடந்த வந்த வாழ்க்கையில் எல்லாமே ஒரே சோகம்ஆனால் அந்த வருத்தம் தெரியாமல் என்றும் புன்னகையுடன், சமூக சேவைக்காக என்றும் காத்துக் கொண்டே இருப்பார்

அவரைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்…1993ல் ஈழத்தில்  மிகப் பெரிய அழிவிற்கு பின், புலம் பெயர்ந்த எண்ணற்ற ஈழத் தமிழர்களில் இவரும் ஒருவர். தற்பொழுது வயது 51. நல்ல வடிவான பெண். களையான முகம், துறுதுறு கண்கள். அவருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று பெண் மற்றும் ஒரு ஆண். மூன்று பெண் குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் சிறு வயதில், அதாவது 5 வயது வரை நன்றாக இருந்துவிட்டு, அதற்கு பிறகு இருவரும் மனவளர்ச்சி குன்றிய (Autism) பெண்கள். அவர்களுக்கு வயது தற்பொழுது 17,18 இருக்கலாம். இந்த இருவருமே அம்மாவை போலவே களையான எடுப்பான முகவடிவம் கொண்டவர்கள், நேரில் பார்த்தால் அவர்கள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவே தெரியாது! 

இப்படிப் பட்ட இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர் தமிழ்ச் சங்கத்திற்கும், தமிழ்ச் சங்க பேரவைக்கும், ஈழத்து உரிமைகளுக்கும் தொடர்ந்து போராடுவதை பார்க்கும் பொழுது மிக மிக பிரம்மிப்பாக இருக்கிறது. ஈழப் போரில் வாள் எடுத்து போராடிய எண்ணற்ற தமிழர்களுக்கு நிகராக இவர் தனது வாழ்க்கையில் தினம் தினம் போராடி வருகிறார் என்று நினைத்தாலே நம்ப முடியாது! 

ஒருமுறை மதியம் தமிழ்ச் சங்க செயற்குழு கூட்டம், மொத்தம் 11 பேர் கொண்ட குழுவில் அவர்களும் ஒரு நபர். செயற்குழு கூட்டம் மதியம் 3.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் 2.45 மணிக்கு தமிழ்ச் சங்க தலைவரை அழைத்து, நான் சற்று கால தாமதமாக வருகிறேன், எனது பெண் குழந்தைகள் இருவரும் கண்களில் குத்திக் கொண்டார்கள், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுகிறேன், மருத்துவரை பார்த்துவிட்டு உடன் வருகிறேன் என்றார்! செயற்குழுவில் உள்ளவர்கள் சிலர் தமாதமாக வருவார்கள். மின் அஞ்சலில் கூட சொல்லமாட்டார்கள். ஆனால் இவரோ இப்படி!!!

4 அல்லது 5 வருடம் முன்பு, அவருடைய மற்றோரு பெண் குழந்தைக்கு முறைப்படி பரதம் பயின்று, மிகப் பெரிய பள்ளி வாளகத்தில் அரங்கேற்றம் நடந்தது. அந்த விழாவிற்கு கிட்டதட்ட 500 தமிழர்கள் வந்து இருந்தார்கள். நாங்கள் பார்த்த முதல் தமிழ் அரகேற்றம் அது. தமிழ்தாய் வாழ்த்திற்கு பரதம் ஆரம்பித்து, பாரதி, பாரதிதாசன், திருக்குறள், புறநானாறு, சிலப்பதிகாரத்தில் இருந்து நடன காட்சிகள்! என்னவொரு புதுமையான சிந்தனை அதனை நிறைவேற்றி காட்டிய பாங்கு! விழாவிற்கு வந்த அனைவருக்கும் உணவு தன்னார்வத் தொண்டர்கள் கொண்ட வந்த உணவு மட்டுமே!  இத்தனை நபர்களுக்கு எந்த உணவகத்திலும் உணவு ஏற்பாடு செய்யாமல் முழுக்க முழுக்க அவரது நண்பர்களும், உறவினர்களும் உணவை ஏற்பாடு செய்து இருந்தார்கள். அந்த விழாவிற்கு நமது கதாநாயகி மிக மிக சாதரண புடவை அணிந்து கொண்டு வந்து இருந்தார். பட்டு புடவை உடுத்தி பழக்கம் இல்லையாம்!  என்ன ஒரு எளிமை!!!



கடந்த மாதம் நடந்து முடிந்த தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் கிட்டதட்ட 2400 தமிழர்களுக்கும் உணவு அளித்த பங்கு இவரின் பங்கும் மிக மிக அதிகம்….உணவு ஏற்பாட்டு குழுவோடு இவர் ஆற்றிய செயல் ஏராளம்விழாவில் கடைசி தமிழர் சாப்பிட்ட பிறகே இவர் தினமும் சாப்பிட்டார்!

எல்லாவற்றிக்கும் மேலாக ஈழத் தமிழர் உரிமைக்கு தொடந்து போராடி வரும் பல இயக்குகளோடு தன்னையும் இணைத்துக் கொண்டு, வாசிங்டன் வெள்ளை மாளிகை முன்பு நின்று அமெரிக்க அதிபரை வேண்டுவதாக இருக்கட்டும், அல்லது நியூயார்க்கில் உள்ள ஐக்கியநாட்டு சபை முன்பு, ஈழ மக்களின் வாழ்வுரிமைக்கு போராடுவதாக இருக்கட்டும் இந்த பெண் சகோதரியே முன்னால் இருப்பார்….

அவரிடம் ஒரு முறை முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு பிறகு, அக்கா ஈழத்தின் இன்றைய நிலமை என்ன? ஈழம் கிடைக்குமா? என்ற கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

என் உடம்பில் தெம்பு இருக்கும் வரை, என் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரைஅமெரிக்காவில் மனித உரிமை இயக்கங்களோடு தொடர்ந்து போராடி கொண்டு இருப்பேன்இதுதான் நான் என் மக்களுக்கு செய்யும் ஒரே கடமை என்றார்!!!

போர்க்களம் கண்டவர்கள் மட்டுமே, போராளிகள் அல்ல!

இப்படி பட்ட நபர்கள் இருக்கும்வரை நம் தமிழ் சமூகத்திற்கு பெருமை

அந்த சகோதரியின் பெயர் எங்கள் ஆசை அக்கா (ஈழ மக்கள் தம் இளைய சகோதரியை ஆசை அக்கா என்று அழைப்பர்) - புஷ்பா ராணி வில்லிம்ஸ்

தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும். (குறள் 268, துறவறவியல்)

தவ வலிமையால் தன்னுடைய உயிர்தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை
மற்ற உயிர்கள் எல்லாம் (அவருடைய பெருமை உணர்ந்து) தொழும்.

திங்கள், 30 ஜூலை, 2012

மறந்து போன கலைகளும் மறவாத அமெரிக்கத் தமிழர்களும்.


தமிழன் என்றோர் இனமுண்டு தனியே
அவர்க்கோர் குணமுண்டு". என்பார் நாமக்கல் கவிஞர்.

தனிஎன்பது நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வதல்ல..
நம் மரபுகளைத் தனித்துவப்படுத்திக் காட்டுவது!
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழையும், தம் கலைகளையும் மறந்தவனில்லை.  அவ்வகையில், புலம் பெயர்ந்தாலும், அமெரிக்கத் தமிழர்கள் “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து, உலகெங்கும் வாழும் தமிழினத்திற்கு குரல் கொடுத்து வருதல் கண்கூடு.
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்விழா அமெரிக்காவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலிருந்து  அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள், திரைக்கலைஞர்கள் பலர் அழைக்கப்பெற்று இந்த விழாவினை மிகச்சிறப்பாக நடத்துவது அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் விருப்பமாகும். அண்மையில் இப்பேரவை தம் வெள்ளி விழாவினை வெற்றிகரமாக அமெரிக்கத் தலை நகரில் கொண்டாடி மகிழ்ந்தது. குறிப்பாக, தமிழத்தில் கூட அரிதாகக் காணப்படும் கலைகளை இப் பேரவையினர் அவ்வல்லுனர்களை இங்கு அழைந்து வந்து அவர்களை ஊக்கப்படுத்துவதும், அக் கலை அழிந்து போகாமல் இருக்க முயற்சி செய்வதும் இவர்களது தலையாயப் பணி.

சிலம்பாட்டம்:  ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு தமிழகத்து கிராமியக் திருவிழாக்களில் சிலம்பாட்டம் இருக்கும்.  இளங்காளைகள் பெண்களைக் கவர்வதற்காகவே அக் கலையில் தேர்ச்சி பெற முயற்சிப்பர். ஆனால் இந் நிலை இப்போது மாறிவிட்டது.  சிலம்பாட்டம் என்றால் என்ன என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.  ஆனால் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையோ, 2009 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஜோதி கண்ணன் என்ற சிலம்பாட்டக் கலைஞரை அழைந்து வந்து, அக் கலைஞரை பெருமைப் படுத்தியது மட்டுமன்றி, அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கு அவரை இங்குள்ள சிறுவ சிறுமியர்களுக்கு அக் கலையைப் பயிற்றுவித்தனர்.  அவர் பேரவையில் நிகழ்த்திய நிகழ்ச்சி இதோ…



தெருக்கூத்து:  நெஞ்சை அள்ளும் நிகழ்த்து கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று, கூத்துக் கலை.  இக் கூத்துக் கலை தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும், வட, தென்னாற்காடு மாவட்டங்களில் அதிகமாகக் காணப்பட்ட இக் கலை இப் போது அழிந்தே போய் விட்ட்து எனலாம்.  கதைக் கருவாக, இதிகாசக் கதைகளையோ, மதுரை வீரன், நல்ல தங்கள் போன்ற நாட்டுப் புறக் கதைகளையவோ கதைக் கருவாக எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் நடக்கும் இக் கூத்தை கிராமத்தினர் மிகவும் விரும்பிப் பார்ப்பர். இவ்வரிய கூத்தை பேரவையினர், 2010 ஆம் ஆண்டு கனெடிக்ட் மாகாணத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டிச் சேரி பல்கலைக் கழகத்திலிருந்து நாடகத்துறையைச் சார்ந்தவர்களை அழைந்து வந்து நிகழ்ச்சியை நடத்தினர்.  அந் நிகழ்ச்சியைக் காணுங்களேன்



தப்பாட்டம்: ‘ தப்பாட்டம்’ என்ற பெயரிலிருந்தாலும், சரியான ஆட்டமாக நிகழ்த்தப் பெறும் நாட்டுப் புறக் கலை இது.  பொதுவாக, இக்கலையை தமிழகத்தில் இறந்தவர்களின் வீட்டிலிருந்து எழுப்பப்படும் ஒலியாக இருப்பதனால், சாவைக் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறானா என ஐயப்படத் தோன்றுகிறது.  எது எவ்வாறாயினும், இவ்வொலியைக் கேட்ட மாத்திரத்தில் ஆடாத காலும் ஆடத் தொடங்கிவிடும் என்பதே உண்மை.   கடந்த 2011 ஆம் ஆண்டு பேரவை தமிழகத்திலிருந்து சக்தி நாட்டியக் குழுவை அழைந்து வந்து பேரவையில் மிகப் பெரிய நிகழ்ச்சியை நடத்தினர்.  தமிழர்கள் மட்டுமன்றி, சார்லஸ் நகரத்தில் உள்ள அமெரிக்கர்கள் இந் நிகழ்ச்சியைக் காண விரும்பியதால் பேரவையினர், விழா முடிந்த அடுத்த நாள், சார்லஸ் நகரத்தில் மீண்டும் ஒரு நிகழ்ச்சிகு ஏற்பாடு செய்தார்கள் என்றால் இவ்வரிய கலைக்கு கரையேது.  பேரவையின் போது எடுக்கப்பட்ட காணொளி இதோ…


சில நூற்றாண்டுகள் மட்டுமே வரலாற்றுப் பதிவுகள் கொண்ட அமெரிக்கர்களும், சப்பானியர்களும், தங்கள் வரலாற்றையும்,கலைகளையும் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால், புரியாத மொழிக்கும், அறியாத செயலுக்கும் நம்மில் சிலர் அடிமைப்பட்டும் நம்மவர்களையே குறை குறிக் கொண்டும்,

தேடிச் சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி 

வேடிக்கை மனிதர் போல் வீழ்வது தான் வேதனையளிக்கிறது.

 ஒரு வேளை, தமிழகத்தில் கலைகள் மறந்து போனாலும் போனாலும் வட அமெரிக்கத் தமிழ் மக்களும், பேரவையும் மறவாது இருப்பர் என்பது மட்டும் உறுதி