ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

தமிழரின் எதிர்காலம் - சுப.உதயகுமார்

தமிழரின் எதிர்காலம் - சுப.உதயகுமார்ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின்போது முள்ளிவாய்க்காலில் வைத்து தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த அன்று, 2009 மே 17-ம் நாள், நாங்கள் மறைந்துவிட்ட ஆருயிர் நண்பர் அசுரனுக்கு நாகர்கோவில் நகரிலே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தோம். அந்த ஒருநாள் நிகழ்வின் அங்கமாக “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். நிகழ்காலம் இருண்டு கிடந்ததால், எதிர்காலம் பற்றி ஏக்கத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தோம். அதேபோல 2012-ம் ஆண்டு மே 17 அன்றும் இடிந்தகரையில் “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒருநாள் மாநாடு நடத்தினோம். இந்தத் தலைப்பின் அவசியம், அவசரம் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

 இன்றைய உலகில் மக்களின் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்துக்கும் ஓர் அரசையே சார்ந்து நிற்கும் நிலை இருக்கிறது. இந்தக் கடமைகளை திருப்திகரமாக அரசுகள் செய்கின்றனவா என்பது ஒரு பெரிய விவாதப் பொருள். ஆனாலும் அரசுதான் இந்த நான்கு விடயங்களையுமே கவனித்து வருகிறது, கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது உண்மை. அரச அரவணைப்பு இல்லாத குர்து மக்கள், பாலஸ்தீனர்கள் போன்றோர் படும்பாடு உலகறியும். உலக நாடுகளனைத்திலும் வாழும் சிறுபான்மைத் தமிழர் எல்லாம் அந்தந்த நாடுகளின் முக்கிய நீரோட்டத்தோடு நீந்திச்சென்று வாழ்வைக் கழிக்கின்றனர். அதிக அளவில் தமிழர் வாழும் இரண்டு பகுதிகளை தனியாக எடுத்து அலசுவோம்.

 ஈழத் தமிழர் ஈவு இரக்கமற்ற இனவெறி பிடித்த சிங்கள அரசிடமும், இந்தியத் தமிழர் சமத்துவ உணர்வற்ற, சந்தேக நோய் பிடித்த, இந்துத்துவ, சாதீய, இந்தி வெறி அரசிடமும் சிக்கியிருக்கிறோம். நமக்குள் மக்கள் எண்ணிக்கையில் அதிகமானோர் இந்தியத் தமிழர்களாய் இருந்தாலும், தமிழர் என்ற செருக்கும், திமிரும், உணர்வும் பெற்றோர் ஈழத் தமிழர்கள்தான். தமிழர் என்ற அடையாளத்தை உயர்த்திப் பிடிப்பவரும் அவர்கள்தான். அபரிமித சக்தி வாய்ந்த ஒரே ஒரு பெரும்பான்மை சமூகத்தை தன்னந்தனியாய் எதிர்கொண்டு நிற்கும் ஈழத் தமிழர்களின் சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தம் பல சிறுபான்மை சமூகங்களை உள்ளடக்கி நிற்கும் இந்திய யதார்த்தத்திலிருந்து மிகவும் மாறுபட்டது. ஒரு குழுவைக் கண்டு அச்சமுறும் நிலை இங்கில்லை. ஆனால் பலருடன் புழங்கி, மழுங்கி, புழுங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் புரிதலும், தெளிவும் இல்லாமல் பரிதவிக்கிறோம். இப்படி ஒரு திருப்புமுனையில் நிற்கும் நமது இனத்தின் எதிர்காலம் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்?

எதிர்காலவியலும் தமிழரும்:

முதலில் எதிர்காலம் அல்லது வருங்காலம் பற்றி தெளிவடைவது இன்றியமையாதது. நமது தமிழ் சமூகத்தில் எதிர்காலம் பற்றிய ஆர்வம், அக்கறை மிகவும் அதிகம். சாதகம், கைரேகை, எண் கணிதம், குறி கேட்டல், கிளி சோதிடம், இராப்பாடிக்காரன் பாட்டு, பூ வைத்தல், பூசை வைத்தல், காவல் தெய்வங்கள் அருள்வாக்கு என எத்தனையோ வழிகளில் புரியாத எதிர்காலத்தை கணிக்க கடிதில் முனைகிறோம்.

 குடும்பத்தில் ஒருவரின் எதிர்காலம் மற்றவர்களின் எதிர்காலங்களோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை நாம் துல்லியமாக உணர்ந்திருக்கிறோம். வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தால், அதன் சாதகத்தை கணித்து, தாத்தா சாகப்போகும் வயது, மாமன் பார்க்கப் போகும் வேலை, சித்தியின் திருமணம் என அனைத்தையும் அறிய முல்கிறோம். துல்லியமாக அறிய முடியாத, நமது கட்டுக்குள் முழுமையாக அடங்காத, மனம்போல மாற்றிக்கொள்ள முடியாத எதிர்காலத்தை இறை நம்பிக்கை, பிரார்த்தனை போன்ற ஆன்மீக வழிகளில் அளந்துவிட, அடக்கிவிட, அமைத்துக் கொள்ள அதீத முயற்சிகள் எடுக்கிறோம்.

 எதிர்காலம் என்பது இனிவரவிருக்கும் நாட்களுக்குள் ஒளிந்து கிடக்கிறது என்று அனுமானித்துக்கொண்டு அதை எப்படியாவது முன்கூட்டியேத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நாம் புரிந்துகொள்கிறோம். முன்னரே தயாரிக்கப்பட்டத் திரைப்படம் ஒன்றின் அடுத்தக் காட்சி போல, எதிர்காலம் தன்னியக்கமாக வரும் என்று நம்புகிறோம். தலைவிதி, கர்மவினை, தெய்வச் செயல் என்பன போன்ற மூட நம்பிக்கைகளால் எதிர்காலம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுவிட்டது என உறுதி பூணுகிறோம். இது தவறான அணுகுமுறை.

 மலையேறும்போது நாமே நமது பாதையை வகுத்துக் கொள்வது போல, கடலோடும்போது நாமே நமது படகின் போக்கை நிர்ணயித்துக் கொள்வது போல, எதிர்காலத்தை நமது எண்ணங்களால், சிந்தனைகளால், விருப்பு வெறுப்புகளால், தெரிவுகளால், திட்டங்களால், செயல்பாடுகளால் நாமே அமைத்துக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை. நம் எதிர்காலம் இன்னொருவரின் கணிப்பிற்கு கட்டுப்பட்டுக் கிடக்கவில்லை; நமது கைகளில் பத்திரமாக இருக்கிறது. அதை நாமே தேர்ந்து, தெளிந்து, தெரிவு செய்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் நாம் பார்க்கத் துவங்கவேண்டும். இதுதான் அறிவியல் ரீதியான அணுகுமுறை. அறிவியல் பூர்வமாக எதிர்காலத்துக்குள் ஓரளவு எட்டிப்பார்க்க முடியும், பெருமளவு நாம் விரும்பும் எதிர்காலத்தை நம்மால் அமைத்துக்கொள்ளவும் முடியும் என்பது அண்மைக்கால அறிவு. எதிர்காலவியல் எனும் பாடமே இன்று பிறப்பெடுத்து, வளர்ந்தோங்கி, ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

 ஒரு தனி மனிதனின் எதிர்காலம் அவளது கைகளில் இருப்பதுபோல, ஓர் மனிதக் குழுவின் எதிர்காலம் அந்தக் குறிப்பிட்ட மக்களின் கைகளில் இருக்கிறது. ஒரு தனிமனிதன் தனது எதிர்காலத்தை சோதிடர், சாமியார் போன்ற இன்னொருவரிடம் கொண்டு அடகு வைத்துவிட்டு, அவர் சொல்வது போலக்கேட்டு கெட்டுக் குட்டிச்சுவராவது போல, ஒரு மனிதக் குழுவும் ஒரு தவறானத் தலைவனையோ, ஒரு கண்ணியமற்றக் கட்சியையோ நம்பி ஏமாந்துபோக முடியும், போகிறார்கள்.

 ‘எங்கேப் போகிறோம்’ எனும் இலக்கு இல்லாமல் ‘எங்கோப் போகிறோம்’ என அலைந்து திரியும் பயணி வழியிலே குழம்பிப் போகிறான்; வம்புகளில் மாட்டிக் கொள்கிறான். வருங்கால சிந்தனையற்ற, தயாரிப்பற்ற வாழ்வு எப்படி சிதைந்து போகும் என்பதை வள்ளுவர் தெளிவாகச் சொல்கிறார்:

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

ஒரு தீங்கு வருவதற்கு முன்னரே காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை தீயின் முன் வைக்கப்பட்ட துரும்புபோல அழிந்து விடும். அதேபோல, இலக்கு இன்றி வாழும் சமூகமும் எங்கேயும் போகாது. தேக்க நிலையிலேயே சிக்கி, செய்வதறியாது திகைத்து, தவறானவர்களைத் தலைவர்களாகக் கொண்டு தகைமை இழந்துவிடும், தவறி விழுந்துவிடும். வள்ளுவர் சொல்கிறார்:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

ஒருவர் ஆராய்ந்து பார்க்காமல் மற்றவரைத் தெளிந்து கொண்டால், அஃது (அவருக்கு மட்டும் அல்லாமல்) அவருடைய வழிமுறையில் தோன்றியவர்களுக்கெல்லாம் துன்பத்தைக் கொடுக்கும். ‘வருவது’ குறித்தும், ‘வருங்கால தலைமுறைகள்’ பற்றியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சிந்தித்திருந்தவர்கள் தமிழர்கள். அண்மைக்கால புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்கூட எதிர்காலம் பற்றி ஏக்கத்தோடு சிந்திக்கிறார்:

என்னருந் தமிழ்நாட்டின் கண்
 எல்லோரும் கல்விகற்றுப்
பன்னறும் கலைஞானத்தால்,
 பராக்கிரமத்தால், அன்பால்,
உன்னத இமமலைபோல்
 ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
 இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?

நமது தமிழினம் இன்று ஒரு திருப்புமுனையில் நிற்கிறது; திக்குத் தெரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டு திணறிக்கொண்டிருக்கிறோம். நாம் எங்கே நிற்கிறோம், எங்கே போகப் போகிறோம், எங்கே போக விரும்புகிறோம் என்பவை பற்றி சிந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தும் இந்திய, இலங்கை அரசுகளின் கைகளில் இருக்கின்றன. தமிழக முதல்வரின் அண்மைக்கால அங்கலாய்ப்புகளைப் பார்க்கும்போதே இந்தியத் தமிழரின் இடைஞ்சல்கள் பற்றி அறிய முடியும்; உண்மை நிலை இன்னும் பல மடங்கு மோசமானது. சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைகளை, அத்துமீறல்களைப் பார்க்கும்போது ஈழத் தமிழரின் இன்னல்கள் பற்றிப் புரியமுடியும்.

 இரு தரப்புத் தமிழருமே நம் மண்ணை, நீரை, காற்றை, கடலை, கடல் உணவை, இயற்கை வளங்களை, எதிர்கால சந்ததிகளை, வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை இழந்துவிடும் அபாயத்தில் இருக்கிறோம். ஆனால் நம்மில் ஒரு சிலரோ தமது கடைந்தெடுத்த சுயநலத்தால், தம்முடைய லாபத்தை மட்டும் பார்த்துக்கொண்டு, இனநலத்தை காவுகொடுக்க முனைகின்றனர். எடுத்துக்காட்டாக, இந்தியத் தமிழராகிய நாம் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் தமிழர் எதிர்காலத்துக்கு ஏற்றதல்ல என்று எதிர்க்கும்போது, நம்மில் சிலர் “நமக்கு மின்சாரம் கிடைத்தால் போதும், நம் சந்ததிகள் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன” என்று சிந்திக்கின்றனர், செயல்படுகின்றனர். வீரமும் விவேகமும் கொண்ட ஈழத் தமிழர் விடுதலைக்காகப் போராடும்போது, அவர்களில் சிலர் அமைச்சர் பதவி கிடைத்தால் போதும் எனும் ஈன வாழ்வை விரும்புகின்றனர். இந்த துரோகிகளைத் தள்ளிவைத்துவிட்டு, தமிழரின் எதிர்காலம் பற்றி சிந்திப்போம். ஒளிமயமான எதிர்காலம்: முதலில், இரு துருவ நிலைகளை அடையாளப் படுத்துவோம். இடது கோடியில் உலகிலேயே எங்கும் இல்லாத, ஏற்றத் தாழ்வுகளற்ற, சமத்துவ சமதர்மம் மிக்க, அநியாயங்களே இல்லாத, அற்புதமான கனவு சமுதாயமாக இருப்போம் எனும் ஆசை. வலது கோடியில் இப்போது இருப்பதை விட மோசமாகி, அடிமைத்தனம் மிகுந்து, அநியாயங்கள் மலிந்து, நாசமாகி, நலிவடைந்து போவோம் எனும் பயம். இவ்விரு துருவங்களுக்கிடையே பல சாத்தியமான, சாசுவதமானக் காட்சிக்கூறுகளை நாம் நமது மனக்கண்ணின் உதவியுடன் கண்டறியலாம்.

 ஈழத்தை எடுத்துக் கொண்டால் ஈழக் குடியரசு அமைந்து நம் தொப்புள்கொடி உறவுகள் சுதந்திரமாக வாழ்வது ஒரு துருவமாகவும், இன்னும் அடிமைப்பட்டு மேலும் துன்பப்பட்டுப் போவது இன்னொரு துருவமாகவும் கொள்ளப்படலாம். இனவாத சிங்கள அரசால், அந்த அராஜகவாதிகளால் இடைநிலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. ஒருங்கிணைந்த இலங்கையில் ஒட்டுக் குடித்தனம் நடத்தலாம்; இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு வடக்கு, கிழக்கு மாநிலங்களில் கையாலாகாத முதல்வர்களை காட்சிப்பொருளாக வைத்துக் கதையை ஓட்டலாம் என்றெல்லாம் வேறு தெரிவுகளைத் தேடுவது வீண் வேலை. காலம் தவறிவிட்டதால், கசப்புகள் பெருகிவிட்டதால், உணர்வுகள் தடித்துவிட்டதால், பிரிந்து வாழ்வதுதான் இரு சமூகங்களுக்குமே சிறந்ததாக இருக்கும். அப்படி முகிழ்க்கவிருக்கும் ஈழக் குடியரசு எப்படி இருக்கும், தன்னகத்தே இருக்கும் முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினரை எப்படி கௌரவமாக, பாதுகாப்பாக நடத்தும் என்பவற்றையெல்லாம் பற்றி கனவு காண்பதுதான் ஈழத் தமிழர்கள் செய்யவேண்டிய எதிர்காலவியல் நடவடிக்கையாக அமையும்.

 தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்பது ஆசையாகவும், ஈழம் போன்ற நிலைக்குள் தள்ளப்படும் அபாயம் பயமாகவும் இரு துருவ நிலைகளாக அமையும். விடுதலைப்பெற்று வாழ்வது, அடிமைப்பட்டுக் கிடப்பது எனும் இரு துருவ நிலைகளுக்கிடையே என்னனென்ன நிலைகள் இருக்க முடியும்? ஒன்று, இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் சுதந்திரம் பெற்ற நாடுகளாக மாறி ஐரோப்பிய கூட்டமைப்பு (European Union), அல்லது ஆசியான் (ASEAN) அமைப்பு போன்று ஒன்றாய்ச் சேர்ந்து சம்மேளனமாக (confederation) வாழ்வது. இரண்டு, “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி” என்ற அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) போல ஒரு கூட்டமைப்பாக (federation) இயங்குவது. மூன்று, இப்போதிருக்கும் இந்தி-இந்து-இந்துஸ்தான் எனும் குரல்வளையை நெரிக்கும், பன்மைத்தன்மையை வெறுக்கும், ஒருமை தேசத்துக்குள் (uni-state) புழுங்கிக்கொண்டே வாழ்ந்து தொலைப்பது. நான்கு, இன்னும் மோசமான இந்தி(ய) ஏகாதிபத்தியத்தின், இந்துத்வா பாசிசத்தின் கீழ் ஓர் இந்து ஹிட்லர் கைகளில் சிக்கிச் சீரழிவது. இந்த தொடர்நிலைகளுக்கு (continuum) வெளியேயும் பல நிலைகளைக் கண்டுணர முடியும். எடுத்துக்காட்டாக, வடதமிழகம், தென்தமிழகம் என தமிழகமே இரண்டாகப் பிரியலாம். விடுதலைக்கு முன்னிருந்த சிற்றரசுகளாக, சமஸ்தானங்களாக, ஜமீன்களாக தமிழகமே சிதறுண்டு போகலாம்.

 மேற்கண்ட காட்சிக்கூறுகளில் எது விரும்பத்தக்கது, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பதை முடிவுசெய்வது எதிர்காலவியலின் இரண்டாவது நிலை. அந்த உற்றதோர் எதிர்காலத்தை எந்த வருடத்துக்குள் அடைய விரும்புகிறோம் என ஒரு கால நிர்ணயம் செய்துகொள்வது அவசியம். எடுத்துக்காட்டாக, நமது உன்னதத் தமிழகம் 2025-ம் ஆண்டுக்குள் கைகூடவேண்டும் என நாம் இலக்கு நிர்ணயிக்கலாம்.

 மூன்றாவதாக, அந்த எதிர்கால கனவு நனவாக எந்தெந்த காலக் கட்டத்தில் என்னனென்ன செய்து முடிக்கவேண்டும் என்பதை பின் நோக்கி நடந்துவந்து (backcasting) குறித்துக் கொள்வோம். அதாவது 2024, 2020, 2018, 2015, 2013 போன்ற வருடங்களுக்குள் என்னனென்னப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என திட்டமிட்டுக் கொள்வோம். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் இப்போது 2012-ம் வருடம் நாம் என்ன செய்யத் துவங்கவேண்டும் என்பதை தீர்மானித்துவிட்டு, அந்த வருங்கால கனவுப் பயணத்தை நாம் தொடங்கலாம்.

 இந்த எதிர்காலவியல் முயற்சிக்கு, கனவு காண்பது என்பது மிகவும் முக்கியம். நாம் எதை அடையவேண்டும் என உண்மையாக, ஆழமாக, தீவிரமாக நினைக்கிறோமோ, விரும்புகிறோமோ, ஆசைப்படுகிறோமோ அதை நிச்சயம் அடைவோம். அதற்கான அடிப்படை ஆதாரம்தான் கனவு. கற்பனை (imagination), கனவு (dream), பகற்கனவு (day dream), மிகுபுனைவு (fantasy), மனக்கண் பார்வை (envisioning), மனத்தோற்றம்/படிமம்/உருவம் (imaging), பிரமை/தோற்ற மயக்கம் (hallucination) எனப் பல வடிவங்களில் வனப்பான வருங்காலத்தை தகவமைக்கும் பார்வை அமையலாம். அது எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமானதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கைகூடும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது,
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது.

எனும் பிரபலமான திரைப்படப் பாடலை அனைவரும் கேட்டிருக்கிறோம்.

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்.
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்,
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்.

இப்படி எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வைப்பற்றி ஒருவர் ‘இப்போது, இங்கே’ நிகழ்காலத்தில் ஆழமாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறார். இதைப் போலவே மகாகவி பாரதியார் தான் அடைய விரும்பும் எதிர்காலத்தை எவ்வளவு தெளிவாக, விரிவாக, அழகாகக் கற்பனை செய்து, தன் மனக்கண் முன்னால் நிறுத்திக் கனவு காணுகிறார் பாருங்கள்:

காணி நிலம் வேண்டும் – பராசக்திகாணி நிலம் வேண்டும்; - அங்குத்தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்துய்ய நிறத்தினவாய் - அந்தக் காணி நிலத்திடையே - ஓர் மாளிகைகட்டித் தரவேண்டும்; - அங்குக்கேணியருகினிலே – தென்னைமரம்கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்பக்கதிலே வேணும்; - நல்லமுத்துச் சுடர்போலே – நிலாவொளிமுன்பு வரவேணும்; அங்குக்கத்துங் குயிலோசை - சற்றே வந்துகாதிற் படவேணும்; - என்றன்சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்தென்றல் வரவேணும். பாட்டுக் கலந்திடவே - அங்கே யொருபத்தினிப் பெண்வேணும்; - எங்கள்கூட்டுக் களியினிலே – கவிதைகள்கொண்டு தரவேணும்; - அந்தக்காட்டு வெளியினிலே; - அம்மா! நின்றன்காவலுற வேணும்; என்றன்பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்பாலித் திடவேணும். இப்படி திரும்ப திரும்ப, தெள்ளத் தெளிவாக உயிரோட்டத்துடன் கனவு காணும்போது, ஆழ்மனம் இதை உள்வாங்கி உயிர்ப்பிக்கிறது. இதுதான் எதிர்காலவியல் முயற்சி, பயிற்சி.

 தமிழரின் எதிர்காலம்:

ஈழத் தமிழர் தமிழ் ஈழம் அமைத்துக்கொண்டு தன்னிறைவோடு வாழ வழிவகைகள் செய்துகொள்ளட்டும். நிச்சயமாக அவர்கள் செய்துகொள்வார்கள். அதற்கானத் திறனும், தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. கவலைப்படவேண்டிய நிலையில் இருப்பவர்கள் தமிழகத் தமிழர்கள்தான். நமக்கு உகந்த அரசியல் அமைப்பைத் தேர்ந்துகொள்வோம். அதை அடைவதற்கு இன்றே, இப்போதே கனவு காணத் தொடங்குவோம். அதன் ஓர் அம்சமாக நமது வரலாற்றைத் தெரிந்துகொள்வோம். பிளேட்டோ (Plato) முதல் நேட்டோ (NATO) வரை பேசும் ஐரோப்பிய வரலாறும், ஆரியர் படையெடுப்பு முதல் ஆங்கிலேயர் ஆதிக்கம் வரை பேசும் இந்திய வரலாறும் அறிந்துகொள்வோம். ஆனால் தமிழர்களாகிய நாம் யார், நமது முன்னோர்கள் யார், அவரது வெற்றிகள்/தோல்விகள், சாதனைகள்/வேதனைகள், பெருமைகள்/சிறுமைகள், பலங்கள்/பலவீனங்கள் என்னென்ன என்றெல்லாம் சமநிலையோடு, முதிர்ச்சியோடு, ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அறிந்துகொள்வது அவசியம். மதவாதம், சாதீயம், நிலப்பிரபுத்துவம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், முதியோராதிக்கம், ஊழல், சுரண்டல், வளம் அழிப்பு, வருங்காலம் பேணாமை போன்ற கொடுமைகள், பிரச்சினைகள் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை, புத்தகங்களைத் தேடிப்பார்த்துப் படிப்பது, தெரிந்து கொள்வது முக்கியம்.

 பொருளாதாரம் பற்றிப் பொதுவாகவும், தமிழகப் பொருளாதாரம் பற்றி ஆழமாகவும் அறிந்துகொள்வது மிக முக்கியம். “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” எனும் வள்ளுவர் கூற்று முற்றிலும் உண்மை. ஆனால் பொருள் மட்டுமே உலகம் இல்லை என்பதையும் இந்த உலகமயமாதல் பேராசைச் சூழலில் நாம் புரிந்திருக்கவேண்டும். வளர்ச்சி என்றால் என்ன, வடக்கத்திய நாடுகளின் வளர்ச்சி சித்தாந்தத்தின் கேடுகள் என்ன, முன்னேற்றம் என்ற பெயரில் வந்துசேரும் பொல்லாங்குகள் என்ன, நமது வாழ்வாதாரங்களைக் காத்திட வேண்டியத் தேவை என்ன, நம் மக்களுக்கு எப்படி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது, எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதற்கு முன்னால் அடிப்படைத் தேவைகளையாவது அவசரகதியில் கொடுப்பது எப்படி என்றெல்லாம் சிந்தித்து செயல்பட்டாகவேண்டும்.

தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இயல்-இசை-நாடகம் எனும் மும்மை, சமய நம்பிக்கைகள், சாதி-மதக் குளறுபடிகள், பெண் விடுதலை, தலித் மக்கள், ஆதிவாசிகள், மீனவர்கள் விடுதலை என அனைத்து விடயங்கள் பற்றியும் நாம் விலாவாரியாகப் பேச வேண்டும், அலச வேண்டும். தினமணி நாளிதழ் தனது யூலை 30, 2012 தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து கவனிக்கத் தக்கது: “தமிழகத்தின் கோயில் சிலைகள் எதுவுமே ஆவணப்படுத்தப்படவில்லை. இத்தகைய கலைப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே நமக்கு அண்மையில் ஏற்பட்டதுதான். தமிழனின் பெருமையைத் தமிழன் உணராமல் வாழ்ந்து வருவதற்கு இதுவும் ஒரு சான்று.” நமது பலத்தை நாம் அறியாமல் இருக்கும்போது, பிறர் நம் பல்லைப் பிடித்து பார்ப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. ஜல்லிக்கட்டு, எருதாட்டம் போன்ற நமது கலாச்சாரத்தின் வீர விளையாட்டுகளுக்குக்கூட உச்சநீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். எது நல்லது, எது கெட்டது என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் நாமே தவிர, மற்றவர்கள் அல்ல. நல்லவற்றை தக்கவைத்துக்கொண்டு, அல்லவற்றைத் தூக்கி எறிவது நமது பொறுப்பு. இதில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” பற்றி தமிழர்களாகிய நாம் நன்றாகவே அறிவோம்.

 இப்படி நம் வாழ்வின் அனைத்து அம்சங்கள் பற்றியும் அலசி, ஆராய்ந்து, வருங்காலத் தேவைகளையும் கருத்திற்கொண்டு, ஓர் “ஒளிமயமான எதிர்கால” தமிழகத்தை மனக்கண்ணில் நிறுத்தி, தமிழர்கள் கனவு காணத் துவங்குவது காலத்தின் கட்டாயம்.

- சுப.உதயகுமார் ( koodankulam@yahoo.com)

சனி, 4 ஆகஸ்ட், 2012

காவேரி பூம்பட்டினம் - பூம்புகார்

தமிழ்நாடு, நாகை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் என் மனதை கவர்ந்த இடங்களுள் ஒன்று. மயிலாடுதுறையில் இருந்து 15 கீமீ இருக்கும். சிதம்பரத்தில் இருந்து 35 கீமீ இருக்கும். 


பண்டைய தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறைமுகமாக இருந்து இருக்கிறது. சோழ நாட்டை சேர்ந்த இந்த ஊர், காவேரி பூம்பட்டினம் எனவும் அழைக்கப் படுகிறது. பூம்புகார் - மருவூர்பாக்கம் என்றும் சொல்லப் பட்டு இருக்கிறது. 


பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்த பூம்புகார் என்னும் சிறிய நகரம். வரலாற்று மற்றும் புவியியல் ஆய்வுகள் இன்னமும் தேவை என பல அறிவியில் அறிஞர்கள் கூறிவருகிறார்கள்.  


சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்ற பார்த்த பொழுது எடுத்த புகைப் படங்களை உங்கள் பார்வைக்கு....கலைஞர் முதல்வராக இருந்த பொழுது 1973 ஆம் ஆண்டு பூம்புகார் புதுபிக்கப் பட்டு, சுற்றுலா தளமாக மெருகு ஊட்டப்பட்டது. 


அருங்காட்சியகம்


கோவலன் கண்ணகி

பூம்புகார் கடற்கரை
மிக அழகான நீண்ட கடற்கரையும், நல்ல உணவகங்களும் இருக்கின்றன....


மயிலாடுதுறையில் இருந்து நிறைய பேருந்துகள் சென்று வருகிறது. 


பூம்புகார் அரசு கல்லூரி, மற்றும் மேலையூர் சீனிவாசா மேல்நிலை பள்ளியும் அருகே உள்ளன. 


நாகை மாவட்டம் சென்றால் நீங்கள் அவசியம் செல்ல வேண்டிய ஊர்....http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)


சிலப்பதிக்காரத்தில் உள்ள காவேரி பூம்பட்டினத்தை, கோவலன், கண்ணகி, மாதவி வாழ்ந்த வரலாற்றை அவசியம் தெரிந்த கொள்ள வேண்டிய ஊர் காவேரி பூம்பட்டினம்....இவர்கள் அனைவருக்கும் அங்கே சிலை வைக்கப் பட்டு இருக்கிறது....

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அந்நிய மண்ணில் தமிழிசை


இசையாருக்குத்தான் பிடிக்காது? அது ஒலிக்கற்றை தானே! நம் ஒவ்வொரு அசைவிலும் இசையின் வடிவங்களைப் பார்க்கலாம், அதிலும், தமிழிசை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், கர்நாடக இசைக்கு நான் எதிரி அல்ல. அது, எனக்கு விருப்பமில்லாமல் போவதற்குக் காரணமே 
தரி னி னினி னானா னானா என்று

இழுத்துக் கொண்டே போய் எப்ப முடிப்பார்கள் என்று தெரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை, எனக்கு வெறுப்பைத் தந்தாலும், இசையை முறையாகக் கற்றவர்களுக்குத்தான் இதனுடையே பொருளும், பின்னணியும் புரியும் என்று நினைக்கிறேன்.அக்னிநட்சத்திரம் என்ற திரைப்படத்தில்,

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்  இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
 
என்ற பாடலை அந்நாளில் முணு முணுக்காதவர் அந்நாளில் யாரும் இருந்திருக்க முடியாது.  நம் இராகதேவனின் மெல்லிய இசை, இப்பாடலுக்கு நர்த்தனமிடும். ஆனால், கவிஞர் வாலிக்கு நின்னுக்கோரிஎன்ற வார்த்தைக்குப் பதிலாக வேறு நல்ல தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை போலும்! “நின்னுக்கோரி” வார்த்தைக்குப் பொருள் தேடியதுயெல்லாம் ஒரு காலம்!.   இப்படி எத்தனையோ உதாரணங்கள்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், பெங்களூரில் தேனிசை செல்லப்பாவின் குரலில் காசி ஆனந்தன் பாடலான “தமிழா! நீ பேசுவது தமிழா” என்ற பாடலைக் கேட்டவுடன், எனக்கு அவர் காலைக் கட்டிக் கொட்டிக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. அதைக் கேட்டால் பிணங்களுக்கும் உணர்ச்சி வரும் என நினைக்கிறேன்.  ஏனெனில், அதில் பாடப்படுகிற மொழி, நம் உணர்ச்சியைத் தட்டிவிடும் ஓர் வினையூக்கி! நீங்களும் தான் கேட்டுப் பாருங்களேன்.அதே போல, “சாந்தி நிலவ வேண்டும்என்ற பாடலை சேதுமாதவ ராவ் எழுதியது என நினைக்கிறேன்.  ஆனால், இதை பட்டம்மாள் பாடிய போது பெரும் வெற்றி பெற்றது. இதற்குக் காரணமே, அப் பாட்டில் உள்ள எளிமையும், கவர்ச்சியான மெட்டுமே காரணங்களாக இருக்கக் கூடும்

சிந்து பைரவி என்ற திரைப்படத்தில் சிவகுமாருக்கும், சுகாசினிக்கும் நாட்டுப்புறப் பாடல் பற்றி ஒரு உரையாடல் வரும். இதோ அந்த காணொளி:

இதில் வரும் சுகாசியினின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடும். நம் வீட்டில் பாட்டி பாடிய தாலாட்டும் (எங்க அம்மாவிற்கு மட்டும் தான் தாலாட்டுத் தெரியாது என நினைக்கிறேன்!!! ..), கிராமங்களில் காணப்படும் ஒப்பாரிப் பாட்டும் நம் மனதை நெருடக் காரணம் அதில் அடங்கிய பொருள் தானே மேலும்,

அமெரிக்க வந்த பிறகு, யாராவது தமிழ்ப் பாட்டு பாட மாட்டார்களா என்று ஏங்கிய போது தான், வாசிங்டன் தமிழ்ச் சங்கம் 2010 ஆம் ஆண்டு தமிழிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள் எனக் கேள்வியிற்று அதைக் கண்டேன். நல்ல முயற்சி! ஒவ்வொரு ஆண்டும் இந் நிகழ்ச்சி மெருகு கூடுவது கண்கூடு.

இதன் தொடர்ச்சியாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை வெள்ளி விழாவிலும் தமிழிசைக்கென்று ஓர் நிகழ்ச்சியைத் தனியாக நடத்தினர். தமிழிசைக்கென்று ஓர் நிகழ்ச்சியைத் தனியாக நடத்துவது பேரவையில் இதுவே முதன் முறையாம்!. 

சற்றொப்ப,பத்தாயிரத்துக்கும் மேலான இசைக் கச்சேரிகளை நடத்திய பெருமைக்கு உரியவர். இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகரின் மாணவரும், தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவரின் மகனுமான கலைமாமணி T.K.S.கலைவாணன் அவர்கள் தலைமை ஏற்றார்கள்.பேரவையின் நிகழ்ச்சிகளில் அனைவரையும் கட்டிப் போட்ட நிகழ்ச்சிகளின் இதுவும் ஒன்று என்று கூறலாம். இடம் பெற்ற அரங்கில் நிற்கக் கூடா இடம் இல்லாத அளவிற்குக் கூட்டம்.  ஏறக்குறைய 30 சிறுவ சிறுமிகள் கலந்து கொண்டும் அனைவரையும் “இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த”  அனைவரையும் அழைத்தனர் என்று கூறினால் அது மிகையாகாது. அவர்கள் தேர்ந்தெடுத்த பாடல்களும் சரி, சொற்களை உச்சரித்த முறையும் சரி, இவர்கள் இந் நாட்டில் பிறந்து வளர்ந்து வருபவர்களா என எண்ணத் தோன்றுகிறது. சிலப்பதிகாரம், பாரதியார் பாட்டு, காசி ஆனந்தன் பாட்டு, காவடிச்சிந்து, பள்ளு வகைப் பாடல்கள் என்றெல்லாம் அசத்தினார்கள்.  இதெல்லாம் எப்படி இவர்களுக்குத் தெரியும் என ஒரு பெற்றோரிடம் கேட்டேன்.  நாங்கள் பாட்டு வகுப்புக்கு அனுப்பும்போதே, தமிழ்ப் பாடல்களைக் கற்றுக் கொடுங்கள் என நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டுவோம் என்றனர். என்ன இருந்தாலும், நம்மை நாமே மறக்கலாமா எனத் திருப்பி என்னைக் கேட்டனர்.  என்னே அவர்களது தமிழ்ப்பற்று!

பேசிக் கொண்டிருந்தால் எப்படி? காணொளியைப் பாருங்கள்:


தலைமையேற்ற கலைமாமணி கலைவாணன், இச் சிறுவ சிறுமிகளின் இராக ஆலாபனைகளைக் கண்டு தாம் புளகாங்கிதம் அடைந்ததாகவும், தமிழ் நாட்டில் வளரும் குழந்தைகள் கூட இவ்வளவு சரியாக ஆலாபனைச் செய்ய மிகவும் நாளாகும் எனக் கூறக் கேட்க மகிழ்ச்சியாயிருந்தது.

அடுத்து பாராட்ட வந்த தோழர்.நல்லக் கண்ணு ஐயா, இச் சிறுவ சிறுமிகளின் உச்சரிப்பைக் கண்டு, உண்மையிலேயே இவர்கள் இங்கு தான் படிக்கிறார்களா? அல்லது தமிழகத்திலிருந்து வந்தவர்களா எனத் தான் ஐயமுறுவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த நாள், திரு.கலைவாணனின் தனி நிகழ்ச்சியும் நடை பெற்றது.  தம் “கணீர்” குரலால் 45 நிமிடம் அவையோரைக் கட்டிப் போட்டார்.  பாரதி, தாசன், காசி ஆனந்தன், ஆகியோரின் பாடல்களைப் பாடும் போது அவையோர் தம்மையும் மறந்து அதிலேயே மூழ்கிவிட்டனர்.  அது தானே, தமிழிசைக்கு வெற்றி! இறுதியில், முடிக்கும் போது, அவையோர், இன்னும் “ஒரே ஒரு பாட்டு” எனக் கேட்ட போது, “ஒரு நாள் போதுமா” எனப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

ஏதோ அறியாத பாட்டிற்கும், புரியாத இராகத்திற்கும் தலையாட்டுவை விட இசையை நம் மொழியோடு கலக்கும் போது, தென்றலைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நுழைந்தது போல் ஓர் உணர்வு.

இவற்றையெல்லாம் உற்றுப் பார்க்கும் போது, தமிழகத்தில் தமிழில் பேசக் கூடக் கூச்சப்படுவதும், அந்நிய மொழியில் பேசினால்தான் பெருமை என்பதும் சிலரது நிலைபாடாகக் கண்டு வருத்தம்தான் அடைய வேண்டியுள்ளது. பொருள் தேடி அந்நிய மண்ணிய வந்தவர்கள், தம் மொழியையும், பண்பாட்டையும் மறவாதிருப்பதும் பெருமைக்குரியதன்றோ?

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

உன்னதமான இயக்குனர் பாலுமகேந்திரா….


உன்னதமான இயக்குனர் பாலுமகேந்திரா….

தமிழ்த் திரை உலகில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்து இருக்கிறார்கள், எதிர் காலத்தில் நிறைய இயக்குனர்கள் வருவார்கள்…ஆனால் நம் திரை உலகில் பாலுமகேந்திராவிற்கு என்று ஒரு உன்னதமான இடம் இருக்கத்தான் செய்கிறது.
பாலுமகேந்திரா என்றவுடன் “வீடு”, “சந்தியராகம்”, “மூன்றாம் பிறை” அருமையான காவியங்கள் எப்படி நினைவிற்கு வராமல் போகும். இந்த மூன்று திரைப் படங்களும் எண்ணற்ற விருதுகளை பெற்றப் படம். வீடும், மூன்றாம் பிறையும் தேசிய விருதுகளை பெற்றவை.

பாலுமகேந்திரா, ஈழத்தில் பிறந்தவர். தமிழில் நிறைய வாசிப்பவர். தமிழ் இலக்கியத்தின் மீது தீராத தாகம் கொண்டவர். நிறைய சிறுகதைகளை படித்து, உள்வாங்கி, அதனையே சிந்தித்து அதனை திரைப்பட வடிவில் கொடுக்க வேண்டும் என்ற தீராத காதலுக்கு சொந்தகாரர் பாலுமகேந்திரா அவர்கள்.

சன் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களுக்கு முன்பு தமிழில் சிறப்பான சிறுகதைகளை எடுத்து, வாரம் வாரம் “கதை நேரம்” என்று தொடராக வந்தவை.  சிறுகதைகளை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நீங்காத இடம் பெற்றவை இந்த தொடர்கள் என்றால் அது மிகையாகது!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தக கண்காட்சியில் இந்த குறும் படங்களில் சிலவற்றை டிவிடி யாக இருந்த பொழுது, அதனை பார்த்தவுடன் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வாங்கி வந்தேன். அதில் இன்னோரு பாகமும் வந்துவிட்டது, அதனையும் வாங்கி வந்தேன். அவற்றுள் மொத்தம் 10 கதைகள் இருக்கின்றன. அனைத்தும் தங்கம், வைரம், மாணிக்கம் என்றால் உண்மையே உண்மை. திரைப் படத்தை, தமிழில் ஒரு மாற்று சினிமா நேசிப்பவர்கள் அனைவரும் வைத்து இருக்க வேண்டிய டிவிடி இது.  
அப்படிப்பட்ட புதையலில் உங்களுக்கு ஒரு வைரத்தை உங்கள் பார்வைக்கு விருந்தளிக்க விரும்புகிறேன். அந்த கதையின் பெயர், “தப்புகணக்கு”, மூலக் கதை – மாலன், திரைக்கதை மற்றும் இயக்கம் பாலுமகேந்திரா.

இந்த கதையின் நாயகி 7 வயது சிறுமி, சக்தி என்ற பெயர் கொண்டவள். இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. இவருடைய கணக்கு பாடத்தில் கேட்கப் பட்ட ஒரு சிறு கேள்வியே இந்த கதையின் மையக்கரு.

சக்தியும், தாத்தாவும் நல்ல நண்பர்கள். தாத்தாவின் பெயர் வைத்தியலிங்கம். சென்னை பல்கலைகழகத்தில் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். பேத்தியின் கேள்விகளுக்கும், புதிய சிந்தனையை தொடர்ந்து ஆதரித்து வருபவர்.

சக்தி கணக்கு பாடத்தில் 100/100 வாங்கினால் பரிசு அளிப்பேன் என்று தாத்தா வாக்கு கொடுத்து இருப்பார். கணக்கு தேர்வு நடக்கும் அன்று, பரிசு வாங்கி வைத்து விட்டு, பேத்தியின் வருகைக்காக மொட்டை மாடியில் காத்துக் கொண்டே இருப்பார்.

பேத்தி சக்தி பள்ளி முடிந்து மாலை வரும் பொழுது கதவை திறக்கும் பொழுது, தாத்தா, சக்தியிடம் கணக்கு நோட்டை எடுத்துக் கொண்டு மேலே வாம்மா என்பார்.

சக்தி மொட்டை மாடிக்கு வந்து, தாத்தாவிடம் நோட்டை கொடுத்து விட்டு, உம்மென்று நிற்பாள், தாத்தா ஏன் என்னாவாயிற்று என்பார்? அந்த நோட்டை எடுத்து பார்த்தவுடன், 80/100 மதிப்பெண்கள் எடுத்தும், ஒரு கேள்வியை தவறு என்று ஆசிரியர் திருத்தி இருப்பார், அந்த கேள்வி மற்றும் பதில் 7 X 2 = 14 என்று இருக்கும். தாத்தா சரியாகதான் உள்ளதே என்பார். அதற்கு குழந்தை சக்தியும் ஆமாம் என்று சொல்லி விட்டு, மீண்டும் உம்மென்று இருக்கும். தாத்தா நீ சரியாகதான் எழுதியுள்ளாய்! உன் மீது தவறு இல்லை, என்று சொல்லி விட்டு சக்திக்கு வாங்கி வைத்துள்ள பொம்மையை கொடுத்தவுடன் மகிழ்ச்சியாக வாங்கி கொள்ளுவாள் பேத்தி சக்தி.  

அடுத்த காட்சியில் தாத்தா, பள்ளி சென்று சக்தியின் ஆசிரியை பார்த்து தன்னை சக்தியின் தாத்தா என்று அறிமுக படித்துக் கொண்டு, அந்த கணக்கில் என்ன தவறு என்பார் மிக மிக பணிவோடு, அந்த ஆசிரியர் அது தப்புதான் சார் என்பார்! எப்படி? என்று மீண்டும் தாத்தா கேட்க, அதற்கு ஆசிரியர், ஒரு வாரத்தில் ஏழுநாள், இரண்டு வாரத்தில் எத்தனை நாள் என்று கேட்டதற்கு உங்களது பேத்தி 2 X 7 = 14 என்று எழுதாமல் 7 X 2 = 14 என்று எழுதியது தவறு என்று சொல்வார்! ”நாங்க வகுப்பில் என்ன சொல்லி கொடுக்கிறமோ அப்படியே எழுதவேண்டும், மாற்றி எழுதினால் மதிப்பெண்கள் தரமுடியாது என்பார்!” தாத்தா நான் உங்களது தலைமை ஆசிரியரை பார்க்க வேண்டி வரும் என்பார், ஆசிரியரும் தராளமாக பார்த்து கொள்ளுங்கள் என்பார்!

தலைமை ஆசிரியரும் முழுக்க கேட்டு கொண்டு, அந்த ஆசிரியரை அறைக்கு வரவழைத்து எல்லாவற்றையும் கேட்டு அறிந்துக் கொண்டு, தாத்தாவிடம் உங்களது பேத்தியின் விடை சரியாக இருக்கலாம், ஆனால் வழிமுறை தவறு என்பார், அதற்கு மேல் அவர்களிடம் பேசி பயன் இல்லை என்று தாத்தா வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்து விடுவார்!

அடுத்த காட்சியில் மாவட்ட கல்வி அதிகாரியை பார்த்து இந்த பிரச்சினையை சொல்வார், அந்த அதிகாரி மிக மிக அவசரமாக வெளியே செல்ல இருப்பதால் இந்த பிரச்சினையை மிக வேகமாக கேட்டு அறிந்து கொள்வார்! அவரும் தன் பங்குக்கு “உங்களது பேத்தியின் விடை சரியாக இருக்கலாம்” என்றும், ”முடிவுகள் சரி இருந்தா மட்டும் போதாது, அதன் வழிமுறைகளும் சரியாக இருக்கவேண்டும் என காந்தி சொல்லி இருக்கிறார்” என்று சொல்லி விட்டு, இந்த பிரச்சினை என்னுடைய எல்லைக்குள் இல்லை, மற்றோரு கல்வி அதிகாரியை பார்க்கவேண்டும் என்று சொல்லு அவரும் கழண்டு கொள்வார்!

அடுத்த காட்சியில் கல்வி மந்திரியை பார்த்து முறை இடுவதற்கு முன்பு, தனது நண்பனிடம் பேசிக் கொண்டு இருப்பார் தாத்தா. நண்பர் உனது மகளிடம் ஒரு முறைப் பேசிவிட்டு, கல்வி மந்திரியை பார் என்பார்…இப்படி சுயமாக சிந்திக்கிற பெண்களுக்கு ஒரு நல்ல முடிவே கிடையாது என்று நண்பனிடம் வருத்தப் பட்டு பேசி விட்டு தன் இல்லம் செல்வார்.

கதையின் இறுதி காட்சி, மொட்டை மாடி, தாத்தா, அவரது மகள், மாப்பிள்ளை எல்லோரும் அமர்ந்து இருப்பார்கள். தாத்தாவிடம், சக்தியின் அம்மா, ”அப்பா நீங்கள் எங்களிடம் பேசி விட்டு, பள்ளி கூடம் சென்று பேசி இருக்கலாம் என்று பேசி கொண்டு இருக்கும் பொழுது, சக்தியின் அப்பா (மாப்பிள்ளை), மாமா, பள்ளி கூடத்தில் சொல்லி கொடுப்பதைதான் பெண் கற்று கொள்ள வேண்டும், Military training போல என்பார், அதற்கு தாத்தா, அப்ப பள்ளிகூடமும், Military training ஒன்று தானே என்பார் தாத்தா!

சக்தியே கேளு என்ன நடந்தது என்று என்பார் தாத்தா, சக்தி மொட்டை மாடிக்கு வந்தவுடன், அப்பா ஒரு வாரத்திற்கு எத்தனை நாள் என்றும் இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள் என்றும் கேட்க, அதற்கு சக்தி 7 X 2 = 14 என்பாள், ஏன் என்று அப்பா கேட்க, அதற்கு சக்தி ஒரு வாரத்தில் ஒரு திங்கள், ஒரு செவ்வாய், ஒரு புதன், ஒரு வியாழன், ஒரு வெள்ளி, ஒரு சனி மற்றும் ஒரு ஞாயிறு உள்ளதால் இரண்டு வாரத்தில் இரண்டு திங்கள், இரண்டு செவ்வாய், இரண்டு புதன்……ஆக மொத்தம் 14 என்பாள்!
தாத்தா, சபாஷ், this is called creativity! Different approach என்பார்! அதற்கு சக்தியின் அப்பா, மாமா, இவ பொட்ட புள்ள! சுயமா சிந்திச்சா இவளுக்கும் கஷ்டம், நமக்கும் கஷ்டம், அப்புறம் இதுவே பழக்கமாக மாறிவிடும், போக போக இவ நடைமுறையில் உள்ள சம்பிராதயங்கள், நம்பிக்கைகள் இப்படி பலவற்றை பற்றி கேள்வி கேட்பா! பொம்பள புள்ள ஊரோடு ஒத்து போகணும்! இப்படி சுயமா சிந்திச்சா ரொம்ப கஷ்ட படுவா! என்று சொல்லி விட்டு அந்த மொட்டை மாடியே விட்டு கீழே சென்று விடுவார் அப்பா, கூடவே அவரது மனைவியும் சென்று விடுவார்!
காமிரா அப்படியே சக்தியின் முகத்தை close up ல் காட்டி விட்டு அத்தோடு கதை முடிந்து விடும்!!!
கதையின் முடிவினை பார்வையாளர்கள் சிந்தனைக்கு விட்டு விடுவார் இயக்குனர். ஒரு பெண் குழந்தை சுயமாக சிந்தித்தால் சமுதாயத்தில் என்ன மாதிரி பிரச்சினைகள் வரும் என்பதை நம் ஊகத்திற்கே விட்டு விடுகிறார் இயக்குனர்!

இந்த கதையை பார்த்து இரண்டு ஆண்டுகள் இருக்கும், ஆனால் இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது! சமுதாயத்தின் மற்றோரு பக்கத்தை, பள்ளிகள் எந்தவித Creativity இல்லாமல் இருப்பதை, ஆசிரிய சமுதாயம் புதிய சிந்தனையை, மாற்றத்தை உள்வாங்க தயாராக இல்லை என்பதை, சக்தியின் பெற்றோரே அந்த குழந்தையின் மாற்று சிந்தனையை போற்றி வளர்க்க தயாராக இல்லை என்பதை 6 அல்லது 7 காட்சிகளில் மிக அற்புதமாக உங்கள் கண் முன்னே படைத்து இருப்பார் இயக்குனர் பாலுமகேந்திரா!

அருமையான கதைகளை, தான் வாழும் சமுதாயத்தில் இருந்தும், நன் முன்னோர்கள் எழுதி வைத்த இலக்கியத்தில் நிறைய இருக்கிறது என்றும் ஆழமாக நம்பும் ஒரு உன்னத படைப்பாளி பாலுமகேந்திரா!

அவரிடம் பல கோடிகள் இல்லை! மாட மாளிகைகள் இல்லை! ஆடம்பர கார்கள் இல்லை! இன்றும் திரைப்பட விழாக்களுக்கு ஆட்டோவில் வருகிறார்! ஆனால் அவரது படைப்புகள் தமிழ் உள்ளவரை, இந்த வானம் உள்ளவரை, இந்த காற்று உள்ளவரை, இந்த கடல் உள்ளவரை இருந்து கொண்டே இருக்கும்!!!

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் (குறள் 975, பெருமை)

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச் 
செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.


புதன், 1 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவில் தமிழ்க் கல்விசென்ற வாரத்தில், என் தோழி ஒருத்தியைப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சந்தித்தேன்.. அவரைச் சந்தித்திருக்கக் கூடாது தான்என்ன செய்வது!  விதி வலிது அன்றோ!  வழக்கமான, நலம் அறிதலுக்கு பின் உரையாடியவை:

தோழி: என்னமோ போங்க!  தமிழு! தமிழுன்னு தமிழ் கிளாசுக்குக் கூட்டிட்டுப் போறாங்க!  ஏங்க! நீங்களே சொல்லுங்க! இதுக (தம் குழந்தைகளை எவ்வளவு அன்பாக அழைக்கிறார் பாருங்கள்!) தமிழ் படிச்சு இந்த ஊர்ல என்ன பன்னப் போறாங்க! டான்ஸ் கிளாசுக்குப் போனா, நல்லா டான்ஸ் ஆடிப் பழகலாம். உடம்பும் Slim ஆக இருக்கும்.

நான்: ஏன் அப்படி சொல்றே! நம் மொழி தமிழ் தானே! அதை மறக்கலாமா! உனக்கும் எனக்கும் உள்ள ஒரே உறவு இது தானே! தமிழுக்கு Language Credit வாங்க முயல்வதாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கூறினார்களே

தோழி: சரி, சரி! நீ பேசாமா தமிழையே கல்யாணம் கட்டியிருக்கலாம்! 

நான்: திருமணம் என்ற உறவு திருமணத்திற்குப் பின் தான் உள்ளம் சார்ந்தது! ஆனால் எம் மொழி, நான் கருவறையிலேயே இருக்கும் போதே, என் உணர்வோடு கலந்து விட்டதே!

இப்படியெல்லாம் கூறிக் கொண்டிருந்தாலும், என் உள்ளம் இங்கு உள்ள தமிழர்கள் தமிழ்க் கல்விக்காக என்ற செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யவே இப் பதிவு.

என்னை வியப்பில் ஆழ்த்தும் பல விடயங்களில் ஒன்று, மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மொழி தன் மீது திணிக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இயற்கை சார்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பது தான். ஏனென்றால் உலக மொழிகளில் பல காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டதாகப் படித்துள்ளோம்.  

தொன்மையான மொழிகள் பல சமுதாய மாற்றங்களினால் சிதைந்து போய் விட்டதைப் பார்த்திருக்கிறோம்.. “தேவமொழிஎன பிதற்றித் திரிபவர்கள் கூட தம் கணவன் / மனைவியிடம் கூட அத் தேவ மொழியைப் பேசுவது கூட இல்லை. கடவுளிடம் இரகசியம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இது போன்ற மொழிக் குப்பைகளுக்கிடையில், காலங்காலமாக, தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்றால் அது தன் இளமைப் பருவத்திலேயே எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது வியப்புதான் மேலிடுகிறது 

இச் சிறப்பு மிக்க தமிழை அடுத்த தலை முறைக்கு எடுத்தச் செல்ல வேண்டிய கடமை புலம் பெயர்ந்தோருக்கு உள்ளது. ஏனெனில்,1990ஆம் ஆண்டிற்கு முன் புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் தமிழில் சரியாக எழுதத் தெரியாது.  தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்று கொஞ்சுகிறார்கள்.  இதை உணர்ந்த அமெரிக்கத் தமிழர்கள் ஆங்காங்கே வார இறுதி தமிழ்ப் பள்ளி வகுப்புகள் தொடங்கினர்.  

இவ் விதைக்குள் தான் எத்தனை மரங்கள்!

இப் பள்ளிகளில் ஆசிரியர்களாகச் செயல்பாட்டவர்களில் பெரும்பாலனோர், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், அறிவியல் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள் ஆகியோரே!

காலம் செல்லச் செல்ல, இவ்வாசிரியர்கள் கீழ்க் கண்ட இடையூறுகளைச் சந்தித்தனர்.

  • ·தமிழ்ப் பாடங்கள் அமெரிக்க நாட்டுச் சூழலுக்கு பொருத்தமாய் இல்லாதது. இப் பாடங்கள், சிங்கப்பூரிலிருந்தோ, தமிழ் நாட்டிலிருந்தோ புத்தகங்களை வரவழைத்து அதைப் பயிற்றுவித்தனர். பாடங்கள் தரமற்றைவாய் இருந்தது
  •  தமிழைக் கற்றாலும், சபேனீசு (Sapnish),  இலத்தின் மொழியைப் போல இரண்டாவது மொழியாக அரசாங்க அங்கீகாரம் இல்லாதது.
  •  தமிழ்ப் பள்ளிகளுக்கிடையே செயல் திட்டங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றமின்மை

இதை உணர்ந்த அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள், மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை செயல்பாடுகளில் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டுவரும் அன்பர்கள் சேர்ந்து  அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம் (American Tamil Academy)” என்ற பெயரில் இலாபநோக்கற்ற கல்வி அமைப்பொன்றை 2009 ஆம் தொடங்கினார்கள். இதுவரை 29 தமிழ்ப் பள்ளிகள் இக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளது என்பது இனிப்பு.

சரி தொடங்கிவிட்டால் போதுமா? மூன்று ஆண்டுகள் ஓடி விட்டனவே, என்ன செய்தார்கள் என்று திரும்பிப் பார்த்தால், பல செயற்கரிய செயல்களைச் செய்துள்ளனர். சிலது மட்டும் கீழே:

  • · தரமானப் பாடங்களை நிலை வாரியாகத் தாங்களே தயாரித்தது. 
  • · கடந்த ஆண்டில் பயன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சற்றொப்ப இரண்டாயிரம். இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை இருநூறு. தமிழ்ப் பள்ளிகளுக்கு வழிகாட்டியாகச் செயல்பாட்டமை
  •  களஞ்சியம்என்ற காலாண்டு இதழ் ஒன்றை வெளியிட்டமை. இதில், தமிழ்ப் பள்ளிச் செய்திகள், குழந்தைகளின் படைப்புகள் போன்றவைகளே இடம் பெறுகிறது.
மேலும் இந் நாட்டில், பயிலும் குழந்தைகள் மொழி மதிப்பீட்டுப் புள்ளியைப் (Language Credit) பெற வேண்டிய சூழலுக்கு ஆட்படுகிறார்கள்.  ஆகவே, அதனைப் பெற முயல்வதுதான் இவர்களது இலக்கு என்று இவ்வமைப்பினர் கூறும் போது, தமிழ், அமெரிக்காவில் செத்தா போய்விடும் எனத் தோன்றுகிறது

இவ்வமைப்பினர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையுடன் கை கோர்த்துக் கொண்டு, தமிழையும் தமிழினத்தையும் முன்னெடுத்துச் செய்வதைப் பார்க்கும் போது  வருங்காலத்தில், “தமிழினம்இம் மண்ணில் ஓர் பெரும் சக்தியாக மாறும் என்பதி ஐயமில்லை